
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயாணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால், அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் சுழற்பந்துவீச்சுக்கு இந்தியாவில் உள்ள மைதானங்கள் சாதகமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து அணி அதிகபடியான சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக டாம் ஹாட்ர்லி, சோயப் பஷீர் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இத்தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்திய அணிக்கெதிரான முதல் போட்டியில் விளையாடிய டாம் ஹார்ட்லி 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்புகளைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணிக்கெதிராக நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்க பயப்பட மாட்டோம் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.