
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸில் நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் இங்கிலாந்து சென்றுள்ளது. இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது பட்டோடி கோப்பை என்றழைக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஜாம்பவான் வீரர்களாக கருதப்படும் இருவரையும் கௌரவிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றால் இந்தப் புதிய மாற்றம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியின் படி, ஜூன் 11 ஆம் தேதி நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது, டெண்டுல்கர் மற்றும் ஆண்டர்சன் ஆகியோரின் முன்னிலையில் இந்த கோப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.