
ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 4 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஸாக் கிரௌலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். பின்னர் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 231 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 20 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 140 ரன்களை அடித்திருந்த பென் டக்கெட் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஸாக் கிரௌலியுடன் இணைந்த ஒல்லி போப்பும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் ஸாக் கிரௌலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தையும், ஒல்லி போப் தனது 8ஆவது சதத்தையும் பூர்த்தி செய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் 14 பவுண்டரிகளுடன் 124 ரன்களை எடுத்திருந்த ஸாக் கிரௌலி தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட்டும் 34 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஒல்லி போப்புடன் இணைந்த ஹாரி புரூக் நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினார்.