ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினாலும் எங்கள் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள்- இசிபி தடாலடி
சர்வதேச ஆட்டங்கள் ஏராளமாக இருப்பதால் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் எப்போது, எங்கு நடைபெற்றாலும் இங்கிலாந்து வீரர்களால் கலந்துகொள்ள முடியாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கைல்ஸ் கூறியுள்ளார்.
கரோனா சூழல் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதையடுத்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை இந்தியாவில் நடத்த திட்டமிட்டு, ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடர் நடைபெற்றது.
இந்நிலையில் பயோ பபுள் சூழலில் இருந்த சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில், 29 ஆட்டங்களுடனே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
Trending
ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்கள் இந்த வருடம் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு நடத்தப்படும் என பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வருகின்றன. ஒருவேளை இந்தாண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்றாலும் அதில் இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்வது தற்போது கேள்விகுறியாகியுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இயக்குனர் ஆஷ்லி கைல்ஸ் கூறுகையில், “இங்கிலாந்து அணி விளையாடும் ஆட்டங்களில் (முன்னணி) இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும் என எண்ணுகிறோம். செப்டம்பர், அக்டோபரில் பாகிஸ்தான், வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்யும் போது அனைத்து இங்கிலாந்து வீரர்களும் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்கள் எப்படி, எங்கே, எப்போது அமையும் என யாருக்கும் தெரியாது. ஆனால் எங்களுக்கு டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் உள்ளிட்ட தொடர்ச்சியான சர்வதேச ஆட்டங்கள் உள்ளன. எனவே எங்கள் வீரர்களை அதற்கேற்றபடி கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. அதனால் அவர்களால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியுமா என்றால் என்னுடைய பதில் இல்லை என்பது தான்” என்று தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனில் மொயீன் அலி, சாம் கரண், ஈயான் மோர்கன், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now