
இங்கிலந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி பிரிஸ்டோலில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லூயிஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஜான்சன் சார்லஸ் மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதன் மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷாய் ஹோப் 2 பவுண்டரி, 4 சிக்ஸ்ர்கள் என 49 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். மேற்கொண்டு அரைசதத்தை நெருங்கிய ஜான்சன் சார்லஸும் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களில் பெவிலியன் திரும்ப, மறுபக்கம் அதிரடி காட்டிய ரோவ்மன் பாவெலும் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டர் - ரொமாரியோ ஷெஃபர்ட் இணை அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு ஸ்கோரை உயர்த்தினர்.