
இங்கிலாந்து அணி அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரிலும், அதனைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
இதில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடர் செப்டம்பர் 2ஆம் தேதி முதலும், டி20 தொடர் செப்டம்பர் 10ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. அதன்பின், செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அயர்லாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. அதேசமயம் இத்தொடர்களுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அடுத்தாண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வேலைகளில் இங்கிலாந்து அணி செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடருக்கான அட்டவணையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.