
இந்திய அண்டர்19 அணி தற்சமயாம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டவது ஒருநாள் போட்டி நேற்று நார்தாம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அண்டர்19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஆயூஷ் மாத்ரே முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த வைபவ் சூர்யவன்ஷி மற்றும் விஹான் மல்ஹோத்ரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 67 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களுக்கும், விஹான் மல்ஹோத்ரா 49 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ராகுல் குமார் 47 ரன்களையும், கனிஷ்க் சௌகான் 45 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.இதனால் இந்திய அண்டர்19 அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அண்டர்19 அணி தரப்பில் ஏஎம் ஃபிரெஞ்ச் 4 விக்கெட்டுகளையும், ஜேக் ஹோம் மற்றும் அலெக்ஸ் க்ரீன் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.