இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 20ஆவது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலுமே உச்சத்தை தொட்டிருந்தது.
இவ்வேளையில் இந்தன் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பாக கிளாசன் 109 ரன்களையும், ஹென்ட்ரிக்ஸ் 85 ரன்களையும், மார்கோ யான்சென் 75 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 22 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக தென்ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.