
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது எதிவரும் மே 21ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது மே 30ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து இத்தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த அணியின் கேப்டனாக ஹீலி மேத்யூஸ் தொடர்கிறார். மேற்கொண்டு அணியின் துணைக்கேப்டனாக ஷமைன் காம்பேல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக அணியின் நட்சத்திர வீராங்கனைகள் சினெல்லே ஹென்றி மற்றும் டியான்டிரா டோட்டின் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனார்.
இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து டி20 மற்றும் ஒருநாள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இந்த அணியில் முன்னாள் கேப்டன் ஹீதர் நைட் சாதாரண வீராங்கனையாக விளையாடவுள்ளார். அதேசமயம் மையா பவுச்சர் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நட்சத்திர வீராங்கனை இஸி வாங் மீண்டும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். முழு உடற்தகுதி இல்லாததால், இந்தத் தொடருக்கான அணியில் சோஃபி எக்லெஸ்டோன் சேர்க்கப்படவில்லை.