
இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. இதில் 2012க்குப்பின் 14 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவை அதன் சொந்த ஊரில் தோற்கடித்து டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது.
மறுபுறம் கடந்த 14 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் என்ன தான் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடியாக விளையாடினாலும் இந்தியாவில் இயற்கையாகவே இருக்கும் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் பட்டேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களை தாண்டி இங்கிலாந்து வெல்வது கடினமாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடைசியாக 2021ஆம் ஆண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய போது இந்தியா வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை தயாரித்ததாக மைக்கேல் வாகன் உட்பட இங்கிலாந்தை சேர்ந்த ஏராளமானவர்கள் விமர்சித்தார்கள். ஆனால் இம்முறை முதல் நாளின் முதல் பந்திலிருந்தே பிட்ச் சுழன்றாலும் அதைப் பற்றி நாங்கள் புகார் செய்ய மாட்டோம் என இங்கிலாந்து வீரர் ஓலி போப் தெரிவித்துள்ளார்.