
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி செல்ம்ஸ்ஃபோர்டில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் டேனியல் வையட் ரன்கள் ஏதுமின்றியும், சோபியா டங்க்லி 3 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் - ஹீதர் நைட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் நாட் ஸ்கைவர் பிரண்ட் 37 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஏமி ஜோன்ஸ் 22 ரன்களுக்கும், அலிஸ் கேப்ஸி 4 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீதர் நைட் அரைசதம் கடந்ததுடன் 66 ரன்களைச் சேர்த்தார்.