
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியும் ஏறத்தாழ அரையிறுதிச்சுற்றை உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இரு அணியிலும் சில மாற்றங்கள் இருந்தன. மேலும் இது ஜோஸ் பட்லர் கேப்டனாக செயல்படும் கடைசி போட்டி என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய சால்ட் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேமி ஸ்மித்தும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவர்களைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் டக்கெட்டும் 24 ரன்களை எடுத்த நிலையில் மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 37 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.