
EN-W vs IN-W, 1st ODI: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் சோஃபியா டங்க்லி - அலிஸ் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளனர்.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய மகளிர் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று சௌதாம்ப்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு டாமி பியூமண்ட் - ஏமி ஜோன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஏமி ஜோன்ஸ் ஒரு ரன்னிலும், டாமி பியூமண்ட் 5 ரன்னிலும் என நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த எம்மா லம்ப் மற்றும் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இருவரும் 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், எம்மா லம்ப் 39 ரன்களுக்கும், கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் 41 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.