
EN-W vs IN-W 2nd T20I: ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அமஞ்சோத் கவுர் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது.இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா 3 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 13 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அமஞ்சோத் கவுர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 63 ரன்களில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் விக்கெட்டை இழந்தார்.