
மகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணியில் தேர்வு செய்யப்பட்ட சுச்சி உபாத்யாய் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 28ஆம் தேதி முதலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 16ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. இத்தொடர்களுக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், அணியின் துணைகேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். மேற்கொண்டு இந்த அணியில் நட்சத்திர வீராங்கனைகள் ரேனுகா சிங் மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அதேசமயம் கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருந்த ஷஃபாலி வர்மா டி20 அணியில் வாய்ப்பு பெற்ற நிலையில், ஒருநாள் அணியில் வாய்ப்பை இழந்துள்ளார்.