
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது. அதன்படி சௌதாம்ப்டனில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீராங்கனைகள் டேனியல் வையட் - மையா பௌச்சர் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் மையா பௌச்சர் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டேனியல் வையட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் அவருக்கு துணையாக விளையாடிய நாட் ஸ்கைவர் பிரண்ட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த டேனியல் வையட்டும் 76 ரன்களில் நடையைக் கட்ட, இறுதியில் ஃப்ரெயா கெம்ப் 26 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களைக் குவித்தது. அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீராங்கனை சூஸி பேட்ஸ் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் மறுபக்கம் ஜார்ஜியா பிலிமெர் ஒரு ரன்னிலும், அமெலியா கெர் 18 ரன்களிலும் அட்டமிழக்க, 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சூஸி பேட்ஸும் ஆட்டமிழந்தார்.