
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இநிந்லையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பிரிஸ்டாலில் நடைபெற்றது.
மழை காரணமாக 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் - பிலிம்மெர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிலிம்மெர் 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சூஸி பேட்ஸும் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த அமெலியா கெர் - கேப்டன் சோஃபி டிவைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெலியா கெர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சோஃபி டிவைன் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடித்திருந்த அமெலியா கெரும் 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆதன்பின் களமிறங்கிய ஹாலிடே 31 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதன் காரணமாக நியூசிலாந்து மகளிர் அணி 42 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய லாரன் பெல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.