
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து கிடைத்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய அணியும் சேர்ந்து அந்த விருந்தை ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறது. மிகக் குறிப்பாக விராட் கோலி தன்னுடைய 49ஆவது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை எடுத்து, ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்தனர். ஆனால் பவர்பிளே முடிந்து சுழற் பந்துவீச்சாளர்கள் வந்த பிறகுதான் ஆடுகளம் அவ்வளவு எளிதானது அல்ல என்பது புரிந்தது. இதற்கு அடுத்து விராட் கோலி ஆட்டத்தை மெதுவாக்கி ஸ்ரேயாஸ் ஐயரை வழிநடத்தி, இந்திய அணியை நல்ல ஸ்கோருக்கு கொண்டு சென்றதுடன் தானும் சதம் அடித்து அசத்தினார்.
இன்று 35 ஆவது பிறந்தநாள் காணும் வேளையில் அவருக்கு உலக கிரிக்கெட்டின் ஹீரோ சச்சின் சதசாதனையை சமன் செய்யும் வாய்ப்பும் கிடைத்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கிறது. மேலும் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவரே தேர்வு செய்யப்பட்டார்.