
இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்த புஜாரா என்று பெயர் வாங்கியவர் ஹனுமா விஹாரி. டெஸ்ட் போட்டியில் 161 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்களை மட்டுமே சேர்த்து அணியை காப்பாற்றியவர். அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்வதற்கு மிகமுக்கிய காரணமே இவர் தான் இதுவரை சர்வதேச டெஸ்டில் 29 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ஹனுமா விகாரி, 839 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஐந்து அரை சதங்களும், ஒரு சதமும் அடங்கும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் எதிர்காலம் என்று கருதப்பட்ட ஹனுமா விகாரி திடீரென்று அணியிலிருந்து காரணமே இல்லாமல் நீக்கப்பட்டார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹனுமா விகாரி, “ஒரு முறை நீங்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டால் மீண்டும் அணிக்குள் வருவது மிகவும் கடினம். ஏனென்றால் உங்களுடைய மனநலம் நிச்சயம் பாதிக்கப்படும். கடந்த சீசன் முழுவதும் நான் அப்படிதான் பாதிக்கப்பட்டேன்.
ஆனால் இம்முறை அனைத்தையும் ஓரம் கட்டி விட்டு என்னுடைய பேட்டிங்கில் மட்டும் நான் கவனம் செலுத்த நினைத்தேன். என்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டேன். கடந்த 12 ஆண்டுகளாக நான் என்ன செய்தேனோ அதை தான் மீண்டும் செய்து கொண்டிருக்கின்றேன். எனக்கு எந்த அணியில் வாய்ப்பு கிடைக்கிறதோ அதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்று தர வேண்டும் என்று நினைக்கிறேன்.