
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் மகளிர் அணியானது விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் உலகக்கோப்பை தொடருக்கும் தகுதிபெற்று அசத்தியது.
அதேசமயம் இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்வி என 0.626 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், வங்கதேச மகளிர் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகள் என 0.639 புள்ளிகளைப் பெற்று புள்ளிபட்டியலின் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதன்மூலம் வங்கதேச அணி தகுதிபெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டது.
இந்நிலையில் இத்தொடரில் சிறந்த விளங்கிய வீராங்கனைகளைக் கொண்டு ஐசிசி தங்களுடைய அணியை தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி ஐசிசி தேர்ந்தெடுத்துள்ள இந்த அணியில் தொடக்க வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸின் கேப்டன் ஹீலி மேத்யூஸும், பாகிஸ்தானின் முனீபா அலியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு மூன்றாம் வரிசை வீராங்கனையாக வங்கதேசத்தின் ஷர்மின் அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.