ஃபீல்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ருதுராஜ் கெய்க்வாட்!
இப்போட்டியில் எங்கள் அணியின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்தது என நினைக்கிறேன் என சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் ஷுப்மன் கில் 50 பந்துகளில் தனது 4ஆவது சதத்தை பதிவுசெய்ய, மறுபக்கம் சாய் சுதர்ஷன் 50 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் சாய் சுதர்ஷன் 103 ரன்களுக்கும், ஷுப்மன் கில் 104 ரன்களுக்கும் என அடுத்தடுத்து துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
Trending
இறுதி பந்தில் ஷாருக் கானும் 2 ரன்களுக்கு அவுட்டாக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை குவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் துஷார் தேஷ் பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் இணைந்த டேரில் மிட்செல் - மொயீன் அலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியது. அதன்பின் டேரில் மிட்செல் 63 ரன்களிலும், மொயீன் அலி 56 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் அணி தரப்பில் மொஹித் சர்மா 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஷுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “இப்போட்டியில் எங்கள் அணியின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்தது என நினைக்கிறேன். மிகவும் எளிதாக 10 முதல் 15 ரன்களை விட்டுக் கொடுத்துவிட்டோம். திட்டங்களின் படி சரியாக செயல்பட்டோம். ஆனால் குஜராத் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் இருவரும் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள்.
இந்த மைதானத்தில் ரன்களை கட்டுப்படுத்துவது எளிதாக இல்லை. அதுமட்டுமின்றி எங்கள் பந்துவீச்சாளர்களாலும் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை. அடுத்த போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளோம். அதில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now