
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் இஷான் கிஷன். இவருக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்காவிடிலும், கிடைத்த வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறார். அதிலும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர்தான் விக்கெட் கீப்பர் என கருதப்பட்டது. ஆனால் கேஎல் ராகுல் உடற்தகுதி பெற்றதால் ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன்பின் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நேரத்தில் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் மீது பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதன்பிறகு ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்படவில்லை.
இதனால் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற தகவலும் வெளியானது. கடந்த ஏழு வாரங்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடாத நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இஷான் கிஷான் இடம் பெறவில்லை. மாறாக இளம் வீரர் துருவ் ஜுரெல் அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டது ரசிகர்களை குழப்பமடையச் செய்தது.