
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு இந்த அளவுக்கு மோசமானதாக இருக்கும் என எந்த இந்திய ரசிகரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அதீதமான நம்பிக்கை, நல்ல ஃபார்ம், ஐபிஎல் போட்டிகள் என நல்ல நிலைமையில்தான் உலகக் கோப்பையில் கோலிப் படை தடம்பதித்தது.
ஆனால், சுவற்றில் அடித்த பந்துபோல், சென்ற வேகத்திலேயே சூப்பர்-12 சுற்றோடு வெளியேறி இந்திய அணி மூட்டை முடிச்சுகளுடன் தாயகம் புறப்படுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு ஐசிசி 50 ஓவர்கள் உலகக் கோப்பையில் இதுபோன்று மோசமான தோல்வியைச்சந்தித்து, முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறி, ரசிகர்களின் கடுமையான அதிருப்தியை வாங்கிக்கட்டிக் கொண்டது.
அதன்பின் 14 ஆண்டுகளுக்குப்பின் இந்த முறை மிகமோசமான தோல்வியைச் சந்தித்து முதல் சுற்றிலேயே கோலிப்படை வெளியேறுகிறது. டி20 உலகக் கோப்பையில் ஆஃப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து அணிகளை இந்திய அணி வென்றுவி்ட்டதே எவ்வாறு மோசமான தோல்வி என்று சொல்ல முடியும் என்று கேட்பது புரிகிறது.
இந்த 3 அணிகளையும் வென்றுவிட்டால் அரையிறுதிக்குள் செல்லலாம், என்றால், இந்திய அணியின் முதல் இரு தோல்வியை மோசமானது என்று கூறாமல் இருக்கலாம்.