சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக டேனியல் விட்டோரி நியமனம்!
நடப்பாண்டும் படுதோல்வியைச் சந்தித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது புதிய பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரியை ஒப்பந்தம் செய்துள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி, 10 தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து இதுவரை விளையாடி வெறும் 13 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றும், 29 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
புதிய கேப்டன் மார்க்ரம் ஹைதராபாத் அணிக்கு மாற்றத்தை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மாற்றத்தையும் அவரால் கொண்டு வர முடியவில்லை. இதன் மூலம் 2016ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றில் விளையாடிய ஹைதராபாத் அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.
Trending
இதற்கு ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் குழுவும் மறைமுக காரணமாக அமைந்துள்ளது. பிரையன் லாரா, முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெயின் என்று ஏராளமான ஜாம்பவான் வீரர்கள் பயிற்சியாளர் குழுவில் இருந்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இதனால் பயிற்சியாளர் குழுவை மாற்ற ஹைதராபாத் அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியது. 2022ஆம் ஆண்டுடன் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருந்த டாம் மூடி பதவியில் இருந்து விலகினார்.
இதன்பின்னர் அந்த இடத்திற்கு பிரையன் லாரா நியமனம் செய்யப்பட்டார். ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக லாரா பணியாற்றிய ஒரே ஆண்டில் அவரை மாற்ற ஹைதராபாத் நிர்வாகம் ஆலோசித்தது. இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஆர்சிபி அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டேனியல் விட்டோரியை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகம் முழுவதும் தி ஹண்ட்ரர் லீக் தொடரில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி, சிபிஎல் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணி, பிக் பேஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட்ஸ், வைடாலிட்டி பிளாஸ்ட் தொடரில் மிடில்செக்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக டேனிடல் விட்டோரி செயல்பட்டுள்ளார். அதேபோல் வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராகவும் டேனியல் விட்டோரி பணியாற்றி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராகவும் டேனியல் விட்டோரி செயல்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு ஆர்சிபி அணி ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது. லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர், ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக டேனியல் விட்டோரி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now