
இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். விராட் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரமும், அதைச்சுற்றி நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக வெடித்தன.
விராட் கோலி திடீரென ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது. ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர விரும்பிய கோலியை நீக்கியது விமர்சனத்துக்குள்ளானதால், அதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினேன். ஆனால் அவர் அதை கேட்காமல் டி20 கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார். வெள்ளைப்பந்து அணிகளை வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதியதால், விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கங்குலி தெரிவித்திருந்தார்.
ஆனால் தென் ஆப்பிரிக்காவிற்கு கிளம்புவதற்கு முன்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி, நான் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கூறியபோது, அதை பிசிசிஐ தரப்பில் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று என்னிடம் யாரும் கூறவில்லை. என்னை ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்குவதாக கடைசி நேரத்தில் தான் தெரிவித்தனரே தவிர, முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றார் கோலி.