
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. டிரினிடாட் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 150 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிசான் 6, கில் 3, சூரியகுமார் யாதவ் 21, ஹர்திக் பாண்டியா 19, சஞ்சு சாம்சன் 12 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் அசத்திய திலக் வர்மா வருமா 39 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் சோதனை என்ற பெயரில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்து வரும் மாற்றங்கள் நிறைய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலகக்கோப்பைக்கு 100 நாட்கள் கூட இல்லாத நிலையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் 12 வருடங்கள் கழித்து ரோகித் சர்மாவை 7வது இடத்தில் களமிறக்கிய அவருடைய சோதனைகள் 2ஆவது போட்டியில் 5 வருடங்கள் கழித்து தோல்வியை கொடுத்தது. அந்த வரிசையில் இந்த போட்டியில் பொதுவாக 1 முதல் 4 வரையிலான டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய சஞ்சு சாம்சன் சம்பந்தமின்றி 6ஆவது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்று அழுத்தமான சூழ்நிலையில் 1 சிக்சருடன் 12 ரன்களில் ரன் அவுட்டானார்.
இந்நிலையில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சோதனைகள் செய்வதில் தவறில்லை ஆனால் அதில் ஒரு திட்டமிருக்க வேண்டுமென ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணி நிர்வாகத்தை முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் விமர்சித்துள்ளார். குறிப்பாக இத்தொடரை வென்ற பின் திலக் வர்மா போன்ற இளம் வீரருக்கு அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பைக் கொடுப்பதே சரியான திட்டமாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் சஞ்சு சாம்சன் 4ஆவது இடத்தில் விளையாடியிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.