
சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 2004ஆம் ஆண்டு அறிமுகமான ஏபி டி வில்லியர்ஸ், 2018ஆம் ஆண்டு வரை விளையாடி ஓய்வு பெற்றார். தென் ஆப்பிரிக்காவுக்கு மூன்றுவித போட்டிகளுக்கும் கேப்டன் ஆகவும் உயர்ந்தார். 2018ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று உறுதி அளித்தார். கூறியதைப்போலவே அடுத்த மூன்று வருடங்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, கடந்த 2021ஆம் ஆண்டு சீசனுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து பேரதிர்ச்சியை கொடுத்தார்.
2008ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 14 ஐபிஎல் சன்களில் விளையாடிய டி வில்லியர்ஸ், முதல் மூன்று சீசன்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக எடுக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டுவரை, தொடர்ந்து 11 சீசன்கள் ஆர்சிபி அணியில் விளையாடினார். ஆர்சிபி அணியின் ஒரு அங்கமாகவே மாறிப்போன டி வில்லியர்ஸ், திடீரென ஓய்வு முடிவை அறிவித்தது மிகவும் வருத்தத்தை ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது. கடந்த சீசனின்போது, இவரை மிஸ் செய்வதாக குறிப்பிட்ட பதாகைகளையும் மைதானத்தில் பார்க்க முடிந்தது.
இந்த வருட ஐபிஎல் சீசன் துவங்குவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், கடந்த மார்ச் 26ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்த சீசனுக்கான ஜெர்சி அறிமுக விழாவை நடத்தியது ஆர்சிபி அணி நிர்வாகம். அதில் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர்கள் கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் இருவரும் கலந்து கொண்டனர். ரசிகர்களுடனும் உரையாடல்களை மேற்கொண்டனர்.