
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் 8ஆவது முறையாக வரும் அக்டோபர் 16 முதல் நடைபெறுகிறது. இந்த தொடரில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்கும் இந்தியா 2007 க்கு பின் 2ஆவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் முன்னதாகவே ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இருப்பினும் சமீபத்தில் சந்தித்த ஆசிய கோப்பை தோல்விக்கு காரணமாக அமைந்த சுமாரான பந்து வீச்சில் இன்னும் முன்னேறாத இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியுள்ளது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் அவரை தவிர்த்து புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் ஆகியோர் மித வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பதுடன் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். எனவே சற்று பலவீனமான பந்துவீச்சு துறையுடன் களமிறங்கும் இந்தியா வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறை அபாரமாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் டாப் ஆர்டரில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பினாலும் ரோகித், ராகுல் ஆகியோர் தடுமாற்றமான பார்மில் இருப்பது ரசிகர்களுக்கு கவலையளிக்கிறது.