
கடந்த 2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் டேவிட் வார்னருக்கு அணியை வழிநடத்த வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து டேவிட் வார்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் தனிப்பட்ட முறையில் தனது விளக்கத்தை அளிக்க இருந்தார். இருப்பினும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரது அந்த மேல்முறையீட்டை இம்மாத தொடக்கத்தில் வலுக்கட்டாயமாக திரும்பபெறச் செய்தது.
இது குறித்து பேசிய டேவிட் வார்னர், “பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு விவகாரத்துக்குப் பிறகு என்னுடைய மன ஆரோக்கியம் 100 சதவிகிதம் சரியாக இல்லை. அது மிகவும் சவாலான காலக்கட்டம். நான் என்னுடையப் போக்கில் சென்றிருந்தால் நாங்கள் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்திருப்போம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தரப்பிலிருந்து பார்க்கையில் எனக்கு எந்த ஒரு ஆதரவும் கிடைக்கவில்லை. என்னுடைய சக வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் பணியாளர்கள் மற்றும் எனது குடும்பத்தினர் அந்தக் காலக்கட்டத்தில் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்றது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.