
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளின் சிறப்பான செயல்பாடு, ஒட்டுமொத்த உலகக் கோப்பையையும் சுவாரசியமாக மாற்றி இருக்கிறது என்பது உண்மை. இந்த உலகக் கோப்பை தொடரை ஒருதலைப் பட்சமாக செல்ல விடாமல் தடுத்ததில், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு பெரிய பங்கு இருக்கிறது. அவர்களால் உலகக் கோப்பையின் புள்ளி பட்டியலில் பெரிய மாற்றங்கள் உண்டானது.
நடப்பு உலக கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணி டெல்லியில் வைத்து இங்கிலாந்து அணியை வீழ்த்திய மறுநாள், தென் ஆப்பிரிக்க அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியது. இங்கிருந்துதான் உலகக் கோப்பைத் தொடர் சூடு பிடித்தது என்று கூறலாம். ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது அரையிறுதி வாய்ப்பில் நீடித்தாலும் நெதர்லாந்து அணி அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறிவிட்டது.
ஆனாலும் கூட அவர்கள் தங்களுடைய கடைசி ஆட்டத்தில் இந்தியாவை பெங்களூரில் வென்றால், அவர்கள் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நெதர்லாந்து வீரர் தேஜா நிடமானூருவிடம் இந்திய அணியை வெல்ல முடியுமா? என்பது குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டது.