
ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப்போல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மஹாராஜாஸ் அணி, உலக ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள உலக ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெயில் 5 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் ஃபிஞ்ச் - ஷேன் வாட்சன் இணை அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் ஃபிஞ்ச் 25 பந்துகளில் தனது அரைசத்தைப் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து 108 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்தனர்.
அதன்பின் 53 ரன்களில் ஃபிஞ்ச் ஆட்டமிழக்க, மறுமுனையில் 55 ரன்களைச் சேர்த்திருந்த ஷேன் வாட்சனும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜாக்ஸ் காலிஸ், ராஸ் டெய்லர், கெவின் ஓ பிரையன், மோர்னே வேன்வைக் என அனைவரும் ஒற்றையிலக்க ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் உலக ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. மகாராஜாஸ் தரப்பில் அபாரமாக பந்துவீச்சிய ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.