பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி நேற்று ஆசிய கோப்பையில் மோதிய போட்டியில் முதல் நான்கு முக்கிய விக்கெட்டுகளை வெகு சீக்கிரமாக இழந்துவிட்டது. பாகிஸ்தானின் ஆரம்பகட்ட வேகப்பந்து வீச்சு தாக்குதலை கொஞ்சம் கூட இந்திய பேட்ஸ்மேன்களால் கணிக்கவே முடியவில்லை. இந்த நிலையில் நேற்று ஐந்தாவது இடத்தில் களம் இறக்கப்பட்ட இஷான் கிஷான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 81 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இவர் ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார். இதன் காரணமாகவே இந்திய அணி 266 என்ற கௌரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது. கே.எல்.ராகுல் இன்னும் உடல் தகுதியை எட்டாத காரணத்தினால், அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் இஷான் கிஷான் உறுதியாக விளையாடுவார் என்று தெரிந்தது. ஆனால் அவருக்கு அவருடைய துவக்க இடத்தை தருவார்களா? இல்லை நடு வரிசையில் இடம் தருவார்களா? என்கின்ற கேள்வி இருந்தது.
இந்த நிலையில் நடு வரிசையில் அனுப்பப்பட்ட அவருக்கு வேகப்பந்துவீச்சாளர்களின் அச்சுறுத்தல் கொஞ்சம் குறைந்து, லெக் ஸ்பின், லெஃப்ட் ஹேண்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின் பவுலர்கள் வர, இடதுகை வீரர் என்பதால் விளையாடவும் எளிமையாக இருந்தது. எனவே அவர் சிரமமின்றி ரன்களை எடுக்க மெல்ல மெல்ல பார்ட்னர்ஷிப் உருவாகி இந்திய அணி மீண்டு வந்தது.