
2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. கடந்த முறை இங்கிலாந்தில் வைத்து நடைபெற்ற 12 வது உலகக்கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் கடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளிலும் நடத்திய நாடே கோப்பையை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த முறை இந்தியாவில் வைத்து நடைபெறும் போட்டிகளில் இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். உலகக்கோப்பை போட்டிகளுக்கான நாட்களில் நெருங்கிக் கொண்டே இருக்கும் வேளையில் உலகக்கோப்பையில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணிக்கு ஏராளமான கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை முன் வைத்துள்ளனர். ஒரு பலம் வாய்ந்த அணியை உலகக்கோப்பைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தென் ஆப்பிரிக்காவில் வைத்து நடைபெற்ற 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றியவர். இந்த இரண்டு உலகக் கோப்பைகளையுமே இந்தியா வென்று இருக்கிறது. இந்த இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளிலும் கௌதம் கம்பீர் இந்திய அணிக்காக அதிகமான ரன்களை எடுத்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக சதத்தை மூன்று ரன்களில் தவறவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.