
இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் 74 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும் இத்தொடரில் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் பங்கேற்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. முன்னதாக கடந்த 2008இல் தொடங்கப்பட்ட ஐபிஎல் இன்று விஸ்வரூப வளர்ச்சி காண்பதற்கு மிகச் சிறப்பாக விளையாடி ரசிகர்களை கவர்ந்து முக்கிய பங்காற்றிய கிறிஸ் கெயில், சுரேஷ் ரெய்னா, ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் கடந்த வருடம் முற்றிலுமாக ஓய்வு பெற்றார்கள்.
இந்த மூவருமே தங்களது தனித்துவமான திறமைகளால் தங்களது அணிகளுக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்து ரசிகர்களின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம் பிடித்துள்ளனர். அப்படிப்பட்ட இவர்களில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பேட்ஸ்மேன் யார் என்பதை பற்றி அதை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் சிறிய விவாத நிகழ்ச்சியை கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் இடையே விவாதிக்கப்பட்டு வரும் அந்த நிகழ்ச்சியில் நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் கருத்துக்களை தெரிவித்து சிறந்தவர் யார் என்பதை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரிடையே யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் கொடுத்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.