
மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. நிதா தர் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்தார். தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி இந்த இலக்கை எளிதாக விரட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு இந்திய அணிக்குச் சவாலாக அமைந்தது. முதல் 5 விக்கெட்டுகளை 12.1 ஓவர்களில் 65 ரன்களுக்கு இழந்தது இந்திய அணி. இதனால் கடைசிக்கட்டத்தில் போராட வேண்டிய நிலைமை உருவானது. ரிச்சா கோஷ் 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணிக்குப் பயத்தை ஏற்படுத்தினார்.
ஆனால் இந்திய பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் தோல்வியடைய நேரிட்டது. இந்திய அணி, 19.4 ஓவர்களில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நஷ்ரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் வீராங்கனை அலியா ரியாஸ், பவுண்டரி அருகே அபாரமாக கேட்சுகளைப் பிடித்தார். பலருடைய கடின உழைப்பால் மறக்க முடியாத வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான் மகளிர் அணி.