
இங்கிலாந்தின் பழம்பெரும் கிரிக்கெட் தொடரானது கவுண்டி சாம்பியன்ஷிப். இதில் கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் இரண்டிற்கான நடப்பு சீசன் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தொடரில் நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் குளஸ்டர்ஷயர் (Gloucestershire) மற்றும் கிளாமோர்கன்(Glamorgan) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செல்டன்ஹாமில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கிளாமோர்கன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குளஸ்டர்ஷயர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய குளஸ்டர்ஷயர் அணியானது முதல் இன்னிங்ஸில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கமுடியாமல் தடுமாறி 179 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய கிளாமோர்கன் அணியும் சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்த காரணத்தால் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இருப்பினும் முதல் இன்னிங்ஸில் கிளாமோர்கன் அணியானது 18 ரன்கள் முன்னிலை வகித்தது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த குளஸ்டர்ஷயர் அணியின் தொடக்க வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் 184 ரன்களையும், மைல்ஸ் ஹம்மோண்ட் 121 ரன்களையும் விளாச, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேம்ஸ் பிரேசி 204 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் குளஸ்டர்ஷயர் அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 610 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாகவும் அறிவித்தது.