
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால இப்போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 43 ரன்களை குவித்தார். இதனையடுத்து, 94 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 7 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை மட்டுமே எடுத்து.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.