
West Indies vs Australia T20I: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சேஸிங்கின் போது அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 31 ரன்களையும், ரோவ்மன் பாவெல், ஷெஃபெர்ட் தலா 28 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல் 47 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 51 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 55 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.