
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இதில் முதல் போட்டி அக்டோபர் 1 ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 11.45 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இன்றைய தினம் ஆஸ்திரேலிய அணி பயிற்சி மேற்கொண்டிருந்த போது, பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மிட்செல் ஓவன் அடித்த பந்தினை தடுக்க முயன்று கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த தொடரில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்டர் ஜோஷ் பிலிப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக காயம் காரணமாக ஜோஷ் இங்லிஷ் இந்த தொடரிலிருந்து விலகிய நிலையில், தற்போது மேக்ஸ்வெல்லும் விலகியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.