
ஐபிஎல் தொடரின் 18ஆவது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமின்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் சீசனானது இதுவரை சிறப்பானதாக அமையவில்லை.
ஏனெனில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அந்த அணி தற்சமயம் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளதுடன், தொடரின் ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த அணி இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அந்த அணியின் இந்த நிலைக்கு ஜஸ்பிரித் பும்ராவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் பும்ரா, இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயத்தை சந்தித்திருந்த ஜஸ்பிரித் பும்ரா அதன்பின் காயம் தீவிரமடைந்ததன் காரணமாக, இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் அவர் விலகினார்.