
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சீசனுக்கான இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள கேமரூன் க்ரீன் மீண்டும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர்த்து இளம் அதிரடி வீரர் சாம் கொன்ஸ்டாஸுக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம் உஸ்மான் கவாஜாவுடன் கொன்ஸ்டாஸ் தொடக்க வீரராக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.