
நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒரு போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. அதன்படி நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி எடின்பர்க் நகரில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது ஐந்து விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்தது. பின்னர் 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஸ்காட்லாந்து அணியானது 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே குவித்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் பின் ஆலன் 56 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தினார். அதேபோன்று மற்றொரு துவக்க வீரரான மார்ட்டின் கப்தில் 40 ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.