
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது.
அதன்படி ஆடவருக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர், இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் கஸ் அட்கின்சன், ஸ்காட்லாந்து அணி வீரர் சார்லீ கேசல் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில், ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இங்கிலாந்தின் அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் கைப்பற்றி அசத்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் தொடரில் பேட்டிங், பந்துவீச்சு என இரு துறையிலும் அபாரமாக செயல்பட்டு அசத்தியதுடன் தொடர் நாயகன் விருதையும் வென்றதன் மூலம் கஸ் அட்கின்சன் இந்த விருதினை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
மேற்கொண்டு ஜூலை மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா மற்றும் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தப்பத்து ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இதில் ஜூலை மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து கைப்பற்றி அசத்தியுள்ளார்.