
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில் இத்தொடரின் அடுத்த சுற்று போட்டிகள் நேற்று தொடங்கிய. அதன்படி எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள ரயில்வேஸ் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய ரயில்வேஸ் அணியில் உபேந்திர யாதவ் மற்றும் கரண் சர்மா ஆகியோர் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்ட்களையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக உபேந்திர யாதவ் 95 ரன்களையும், கரண் சர்மா 50 ரன்களையும் சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் நவ்தீப் சைனி, சுமித் மதுர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய டெல்லி அணிக்கு அர்பித் ரானா - சனத் சங்க்வான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அர்பித் ரானா 10 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய யாஷ் துல் 32 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி 15 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.