
பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர முன்னாள் ஜாம்பவான் மற்றும் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது அதிரடி நிறைந்த அசுர வேக பந்துகளால் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட் போன்ற உலகின் எத்தனையோ பேட்ஸ்மேன்களை தனது அதிவேகமான பந்துகளால் திணறடித்தவர்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் கிளன் மெக்ராத், பிரெட் லீ போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவராக கருதப்படுகிறார். அதிலும் கடந்த 2003 உலகக் கோப்பை தொடரின் போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 161.3 கிலோமீட்டர் வேக பந்தை வீசிய அவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் அதி வேகமான பந்தை வீசிய பவுலர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.
இதனால் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் வீசிய வேகத்திற்கு ஈடாக நிகழ்காலத்தில் இருக்கும் பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் போன்ற பவுலர்களால் வீச முடிவதில்லை. அதன் காரணமாகவே தற்போதைய கிரிக்கெட்டில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மென்கள் என கருதப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களுக்கு அவரைப் போன்ற ஒரு அசுர வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.