
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநால் போட்டி ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சாய் சுதர்சன் 62 ரன்களும், கேஎல் ராகுல் 56 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 46.2 ஓவரில் 211 ரன்கள் எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்ரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக பர்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு அந்த அணியின் ஒரு துவக்க வீரரான ஹென்ரிக்ஸ் 52 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய டோனி டி ஸோர்ஸி 119 ரன்களும், மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய வாண்டர் டூசன் 36 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 42.3 ஓவரில் இலக்கை மிக இலகுவாக எட்டிய தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.