இந்த சதத்தை அடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது - சஞ்சு சாம்சன்!
கடந்த ஒரு ஆண்டாக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய வேலை செய்து வருகிறேன். அதற்கான பலன்கள் கிடைக்க ஆரம்பித்து இருப்பது நல்ல விஷயம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20-யை தொடர்ந்து ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்ல் நகரில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இன்றைய போட்டியின் மூலம் இந்திய அணியில் ராஜத் படிதார் அறிமுகமானார். இந்திய அணிக்கு ராஜத் படிதார் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது. இவர்கள் முறையே 22 மற்றும் 10 ரன்களை குவித்து ஆட்டமிழக்க சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.
Trending
இவருடன் விளையாடிய கேப்டன் கே.எல். ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையிலும், சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடி 108 ரன்களை குவித்து வில்லியம்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடன் விளையாடிய ரிங்கு சிங் அதிரடியாக ஆடி 38 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்தது.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்தது குறித்து பேசிய சஞ்சு சாம்சன், “இப்பொழுது மிகவும் உணர்ச்சி வசப்பட்டவனாக இருக்கிறேன். தற்பொழுது இதைக் கடந்து செல்கிறேன். இந்த சதத்தை அடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டாக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய வேலை செய்து வருகிறேன். அதற்கான பலன்கள் கிடைக்க ஆரம்பித்து இருப்பது நல்ல விஷயம்.
புதிய பந்தில் அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள். மேலும் பழைய பந்தில் பேட்டிங் செய்ய கடினமாகவும் ஆடுகளம் மெதுவாகவும் இருந்தது. கே எல் ராகுல் ஆட்டம் இழந்ததும், கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் சிறப்பாக இருந்ததும், ஆட்டம் அவர்கள் பக்கம் சென்று இருந்தது. இதனால் நான் திலக் வர்மாவிடம் அந்த இடத்தில் பொறுமையாக விளையாடி, கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டர் இன்று இருப்பதால், 40 ஓவர்களுக்கு மேல் அடித்து விளையாடலாம் என்று கூறி முடிவு செய்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now