1-mdl.jpg)
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் இந்திய அணியானது இந்த தொடரை மிகச் சிறப்பாக ஆரம்பித்துள்ளது. இதுவரை இந்திய அணி தாங்கள் விளையாடிய ஐந்து லீக் போட்டிகளிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இன்னும் லீக் சுற்று போட்டிகளில் இந்திய அணிக்கு நான்கு போட்டிகள் மீதமுள்ள வேளையில் கிட்டத்தட்ட அரையிறுதிக்கான வாய்ப்பு உறுதி என்று கூறப்பட்டாலும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் கட்டாயம் அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். அந்த வகையில் நாளை இங்கிலாந்து அணிக்கு எதிராக லக்னோ மைதானத்தில் இந்திய அணி தங்களது 6ஆவது லீக் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதோடு சேர்த்து இங்கிலாந்து அணியையும் இந்த தொடரில் இருந்து வெளியேற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் நாளைய இந்த முக்கியமான லீக் போட்டியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கப்பட்டு தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.