
முன்னாள் வீரர்கள் பங்கேற்ற லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் முன்னேறின. பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், கோப்பையையும் வென்று சாதித்தது.
இதனையடுத்து இந்தியா சாம்பியன்ஸ் அணியில் அங்கம் வகித்த முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன்சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் ஓய்வரையில் அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடனமாடினர். மேலும் அதில் அவர்கள் மற்றுத்திறனாளிகளைப் போன்று நடந்து வந்த காணொளியானது இணையத்தில் வைரலானதுடன், மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் விதத்தில் இருந்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
மேற்கொண்டு இந்திய வீரர்கள் நடனமாடும் காணொளிக்கு மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய முகமையும் இது முற்றிலும் அவமானகரமானது என தங்களுடைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் விதமாக காணொளி வெளியிட்டதாக முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.