
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடரை இரண்டுக்கு மூன்று என இழந்து அதிர்ச்சி அளித்தது. கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதோடு, ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகிய மூத்த வீரர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் மூத்த வீரர்கள் அணியில் இல்லாததின் வெற்றிடம் மிகத் தெளிவாகவே இளம் வீரர்களின் பேட்டிங் போது தெரிந்தது. எளிமையாக வெல்ல வேண்டிய முதல் மற்றும் கடைசி ஆட்டத்தை இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பி தொடரையே இழந்தது.
இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் “இந்தியா எளிதில் அந்தத் தொடரை கைப்பற்றும் என்று நான் நினைத்தேன். ஆனால் முடிவு பலருக்கும் கவலையையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை தோற்கடித்ததால் நானும் அதிர்ச்சி அடைந்தேன். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது மிகப்பெரிய சாதனை. ஆனால் இந்தியாவுக்கு கவலையான விஷயம்.
ஆம் அந்த அணியில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இல்லை. ஆனால் அவர்கள் நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாட போவதும் இல்லை. இந்தத் தொடரின் மூலம் இளம் இந்தியப் படை நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு மூன்று அணிகளை இந்தியாவால் உருவாக்க முடியும் என்று நான் முன்பு சொன்னேன். அவர்களால் முடியும். ஆனால் சரியான முடிவுகள்தான் இன்னும் வரவில்லை” என்று கூறியுள்ளார்.